Friday, September 15, 2006

நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

தேன்கூடு போட்டிக்கு...!


இதோ, இக்கதை எழுத்து வடிவில்.

நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
பகுதி-1 : மங்கை, யுரோப்பா மற்றும் டி-யி - அறிமுகம்
மங்கை கண் விழித்து எழுந்த பொழுது யுரோப்பாவில் நேரம் சரியாக 21:43 ஆகிவிட்டிருந்தது. அறையெங்கும் தவழ்ந்து வந்த மெல்லிசையை சோம்பல் முறிக்கும் கை அசைவிலேயே குறைத்து விட்டு, தலையைத் திருப்பி அந்த சிறிய சாளரக் கண்ணாடி வழியாகப் பார்த்த பொழுது ஜூபிட்டர் கிரகம் சூரிய வெளிச்சத்தில் தங்க நிறத்தில் தகதகத்தது. இதற்காகத்தான் இதற்குச் செலவாகும் இ-யுனிட்ஸ் அதிகமானாலும் சரிதானென்று இந்த உயரத்தில் இடம் வாங்கித் தங்கிவிட்டிருந்தாள். டைட்டனில் கூட இதுபோல் காட்சி காணக் கிடைக்காதே!
"மேன்..!! விழித்து விட்டாயா?" எனக் கேட்டவாறே பறந்து வந்தது யுரோப்பா வடிவிலான குட்டி ரோபோ. ஆதன் ஆங்கிலச் செல்லப்பெயர் டக்-எக். அவள் வைத்தது. "ஏய் டி-யி..." அதனை இரு கைகளாளும் பிடித்து தலையை ஆட்டி "மேன் இல்லை... மங்கை...!" சொல்லிக் கொடுத்தாள்.. "ஹ்ம்.. புதியதாயிற்றே, பயிற்சியளிக்க வேண்டும்." என எண்ணிக் கொண்டே எழுந்தாள்.
ஜூபிட்டர் கிரகத்தைச் சுற்றும் பல நிலாக்களில் யுரோப்பாவும் ஒன்று. அங்கு ஒரு நாள் என்பது 85 மணி நேரங்கள் கொண்டது. மூன்று 24 மணி நேர பூமி-நாட்களில் 8 மணி நேர வேலை நேரங்கள் - இரண்டு சூரிய வெளிச்சத்திலும், ஒன்று இரவுப்பொழுதிலுமாய். பின்னர் மிச்ச நேரம் ஓய்வு. ஓய்வெங்கே எடுக்கிறார்கள்? கிரகம் விட்டு கிரகம் பறந்தல்லவா திரிகிறார்கள் மக்கள்.
இது வருடம் 2082. கலிலியோ தொலைநோக்கியில் கண்டுபிடித்த யுரோப்பாவா இது? இங்கு மனித இனத்தின் விண்கலம் இறங்கி 23 வருடங்கள் ஆகி விட்டிருந்தன. வந்த நான்கு வருடங்களில் - வானுயர குடியிருப்புகள் அமைத்து மக்கள் தங்குமளவிற்குத் தயார் படுத்தியாகிவிட்டது. நீர்வளம் இருப்பினும் இன்றும் பூமியிலிருந்தும், செவ்வாயிலிருந்தும் உணவும், இதர மூலப்பொருட்களும் தருவிக்க வேண்டிய நிலமைதான்.
யுரோப்பாவின் இயற்கைக் கணிம வளங்களை ஆராய்ச்சி செய்யும் ஒருங்கிணைந்த இந்தியத் துணைக்கண்டம் - யு.எஸ்.ஐ. - யின் பெருமைக்குரிய ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆராய்ச்சியாளினி மங்கை. எப்படியும் இங்கு பச்சைத்தாவரங்கள் வளர வைத்து விடுவது அவர்களின் நோக்கம். பூமியிலிருந்து மண் எடுத்துதான் இதுவரை உணவுப்பயிர்கள் வளர்க்க முடிந்துள்ளது. மரங்கள் நிறைந்த காடுகள் வளர்க்க இவை போதாதே.பகுதி-2 : இட்லி முதல் ஈமெயில் வரை
மங்கைக்கு இன்று முழுவதும் விடுமுறை - அதாவது மூன்று பூமி-நாட்கள். என்ன செய்வதென அழகாய் புருவங்கள் சுருக்கி யோசித்தாள். பிறகு தன் விரல்களை நீட்டியபடியே கையசைக்கவும் எதிரில் இருந்த சுவற்றின் வண்ண ஓவியம் மறைந்து, மாபெரும் கணிணித்திரை விரிந்தது. ஏற்கனவே பலமுறை படித்திருந்த ஈமெயில் செய்தியாய் இருந்தாலும் தேடி எடுத்துப் படித்தாள். பூமியில் ஆளுமைப் பொறுப்பில் உயர் பதவியிலிருக்கும் அவளின் உற்ற நண்பன் ப்ரேம் எழுதியிருந்தது. "உன்னைப் பெற்ற தாயின் பெயரும் இருப்பிடமும் கண்டுபிடித்தாயிற்று. வந்து போ. பார்த்துவிடலாம்."
"சாப்பிட என்ன வேண்டும் மங்க்க்.." விர்ரெனப் பறந்து வந்து அவளின் தலையை மையமிட்டு நீள்-வட்ட வடிவில் சுற்றிய படியே கேட்டது டி-யி. இதமாய்ப் புன்னகைத்தவள், "ஒரு நூறு வருடங்களுக்கு முன் தென் இந்தியர்கள் என்ன சாப்பிட்டார்கள் சொல்லேன். உடலுக்குத் தீங்கில்லாமல், கலோரி விகிதமும் சரியாக இருக்க வேண்டும்."; சொல்லிய மறுநொடியில் இடது பக்க சுவற்றில் டி-யி தயவில் படங்கள் சிறு கட்டங்களாய் விரிந்தன. "ஏய், என்ன அது?" அவள் கையை நீட்டவும் அவள் கைகாட்டிய அந்த விடியோ படம் பெரிதாய் விரிந்தது. "அது தான் இட்லி." என டி-யி சொல்லவும், "ஓ... இதுதானா, கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை. கிடைக்குமா?" கேட்டாள். திரையில், டைட்டனில் கிடைக்கும் என்ற விபரங்கள் வந்தன. "ஹ்ம்ம், இன்று ஒரு கை பார்த்துவிடலாம். வாங்கிவிடேன்... " சொல்லிக்கொண்டே கையசைத்த பொழுது, படங்கள் மறைந்து ஈமெயில் திரையைப் பார்க்க புதிதாய் ஈமெயில் செய்தி ஒன்று முளைத்திருந்தது.
தெரியாத ஈமெயில் முகவரி. "இது எப்படி விதிமுறைகளைத் தப்பித்து வந்தது?" மெல்ல இதழ் கடித்து யோசித்தாள். "இதன் இ-யுனிட் அளவு என்ன?" தேடிப்பார்த்ததும் உண்மை புரிந்தது. 22 என்று இருந்தது. இ-யுனிட் அளவு 20க்கும் மேல் இருந்தால் குப்பையாகக் கருதும் முன் காட்டவும் என ஈமெயில் விதிமுறைகளைத் தளர்த்தியது நினைவுக்கு வந்தது. 20 இ-யுனிட் அளவு அவளின் ஒரு மணி நேர உழைப்பின் பலன். அதனை வைத்து நிறைய்ய்ய பொருட்கள் வாங்கலாம். இப்பொழுதெல்லாம் புதியதாய் ஒருவரின் கவனத்தைக் ஈமெயிலில் கவர வேண்டுமென்றால் இ-யுனிட் மதிப்பளிக்க வேண்டும். அதை ஈமெயில் பெற்றுக்கொள்பவர் வைத்துக்கொள்ளலாம். இப்படித்தான் ஆயிரமாயிரம் குப்பை-மெயில்களை ஒதுக்க முடிகிறது.

"படித்துவிடலாம். என்ன ஆகிவிடும்" என செய்தியைத் தேர்வு செய்ய, அது திரையில் விரிந்தது.
தமிழில் எழுதப்பட்டிருந்தது. வேறு யாரும் படிக்க இயலாதபடி சிறப்பு பாதுகாப்பு முறையில் அனுப்பப்பட்டிருந்தது. பெயர் எதுவும் இல்லாமல், "வணக்கம். நாங்கள் பழமைவாதிகள் என அரசாங்கத்தால் குறிப்பிடப்படுபவர்கள். குடும்பம் என்றால் என்ன என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மீண்டும் குடும்பங்களாய் மனித இனம் மாற உங்களுக்கு விருப்பமா? மேலும் தகவல்கள் இந்த இடத்தில்" என தகவல்சுட்டி அடிக்கோடிடப்பட்டு இருந்தது. மங்கையின் கயல் விழிகள் விரிய மேலே பார்த்தபடி மீண்டும் ஒருமுறை சிந்தனையில் மூழ்கினாள்.
பகுதி-3 : பெற்றெடுத்தவள் யாரோ?
நிலவில் மனிதன் குடிபெயர்ந்த நாட்கள் முதலே பூமியில் பல மாற்றங்கள் நடந்தன. போர்கள் நின்றுவிட்டன. பல சிறிய நாடுகள் ஒன்றாய் இணைந்தன. உயிர் காக்கும் முறைகள் மேம்பட்டன. தாவர உணவுமுறை பழக்கத்திற்கு வந்தது. இயற்கை வளங்கள் மேம்பட்டன. அறிவியல் வளர்ச்சி விண்ணோங்கியது. ரோபோக்கள், திசுக்கள் மறுவளர்ச்சி, நானோ-டெக் இயந்திரங்கள், அதிவேக விண்கலங்கள், இன்னும் பல... உயர் தொழில்நுட்பமே பலம் எனப் புரிந்துகொண்ட மனிதர்கள் அறிவியல் அறிவறிதலில் கவனம் செலுத்தினார்கள். நிலவு, செவ்வாய்க்கிரகம், டைட்டன் என மனித இனத்தின் ஆளுமையை விரிவுபடுத்தி பல திக்கிற்கும் விண்கலங்கள் அனுப்பி வைத்தார்கள். இன்னமும் வேற்று கிரக வாசிகள் கண்டுபிடிக்காத நிலையில் மனித இனமே இந்தப் பிரபஞ்சத்தில் மேம்பட்டது என்ற எண்ணம் வளர்ந்தது.
ஆனால் சமூகம் சீரழிந்தது. குடும்பங்கள் அடியோடு ஒழிந்தன. சேர்ந்து வாழ்தல் என்பதே மறைந்து போனது. பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட சட்டம் உருவாயிற்று. பெற்றோர் யாரெனத் தெரியாமல் வளர்ப்புக்கூடங்களில் வளர்ந்தன குழந்தைகள். இதெல்லாம் இன்று நேற்றல்ல. நாற்பத்தைந்து வருடங்களாகிவிட்டன. பாசமெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

மங்கையும் அப்படித்தான். பிறந்தது எங்கு எனக்கூட தெரியாமல் நிலவில் வளர்ந்தாள். தமிழ் கற்றுவிக்கப்பட்டதால் அதுதான் தன் தாயின் மொழி என்பது மட்டும் தெரியும். பள்ளியின் விடுதியில் வளர்ந்து, 19 வயதில் வேலைக்குச்சென்ற பிறகு தான் விடுதலைக் காற்றை சுவாசித்த உணர்வு. பெற்றெடுத்தவளைப் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் படிக்கும் வயதில், ரோபோ ஆசிரியை குழந்தைப் பெறுவதைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கையிலேயே துளிர்விட்டது. இன்று அந்த எண்ணம் உயர்ந்த மரமாய் வளர்ந்துவிட்டது.
மங்கை அதிவேகமாய்க் கிளம்பினாள். அவசரமாய் எலக்ட்ரானிக்-குளியல் முடித்து, பாதுகாப்பு உடை அணித்து கிளம்பி - இட்லி சாப்பிட்டது கூட நினைவில்லாமல், ரிவர்ஸ் பூஸ்ட்டர்கள் செலுத்தி திருப்பி அதிவேக விண்பாதையில் தன் கருப்பு நிற விண்கலத்தை செலுத்தினாள். நேராக நிலவிற்கு அருகில் உள்ள பழமைவாய்ந்த 'மூன்-வாக்' வான்வழி நிலையத்தில் இறங்கி அவளுடைய விண்கலத்தின் எரிபொருள் நிரப்பிவிட்டு பிறகு பூமிக்குப் போகலாம். போய்ச்சேர இன்னும் எட்டு மணி நேரம் ஆகும்; தானியங்கியை இயக்கிவிட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என இருக்கையயை விட்டெழுந்த சில மணித்துளிகளில் ஓர் அபயகுரல் தகவல் கேட்டது.
விண்கலத்தின் கட்டுப்பாட்டுத் திரையில் விபரங்களைப் விரிவுபடுத்திப் பார்த்தாள். அவளின் விண்கலத்தைப் போன்ற வேறு ஒரு கலம் பயணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. தானியங்கியை நிறுத்தி, வேகத்தைக் குறைத்து "என்ன வேண்டும்?" என ஆங்கிலத்தில் பதில் தகவல் அளித்துவிட்டு அந்த விண்கலத்தைப் பற்றிய தகவல்களைச் கவனமாய்ச் சரிபார்த்தாள். இது ஒன்றும் விண்கொள்ளையர்களின் கலம் இல்லை. பாதுகாப்பானதுதான்.
பகுதி-4 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என கலப்புத் தமிழில் பதிலோடு வினா வந்தது.
தன் வாழ்க்கைத்தடம் இந்த நொடியிலிருந்து மாறப்போவது தெரியாமல் "விண்காவலர்கள் வரவில்லையா?" என பதில் அனுப்பினாள் அவள், இம்முறை தமிழில். "இரண்டு மணிநேரம் தாமதம் ஆகுமாம். அதுவரை இங்கிருக்க விருப்பமில்லை. நிலவுக்குத்தான் பயணமென்றால், அங்கு அழைத்துச்செல்ல முடியுமா? விண்காவலர்களுக்கு தகவல் அனுப்பிவிடலாம்." ஒன்றும் பாதகமில்லை என மனம் கணக்கிட்டது. அவளின் கலம் இதிபோல் பல விண்கலங்களை இணைத்துச் செல்லும் சக்திவாய்ந்தது. மேலும் அந்தக்கலத்திலிருப்பவர்களைச் சந்திக்கவே தேவையில்லை; ஆதலால் பயமில்லை. "சரி. விண் இணைப்பு செய்ய ஆயுத்தமாகவும்" பதில் அனுப்பினாள். "நன்றி ! நல்ல வேளையாய் வந்தீர்கள்" என பதில் வந்த சில நொடிகளில் விண் இணைப்பிற்கான வேகத்திற்குக் குறைந்து, கோணம் மாறி, லேசர் கீற்றுகளின் துணையோடு இணைப்பு சாத்தியமாகியது.
நிலவிற்கான சரியான நேர்பாதையில் இரு விண்கலங்களும் இணைந்து பறக்கத்துவங்கிய சில வினாடிகளில் மீண்டும் தானியங்கி பொத்தானை இயக்கிவிட்டு ஒய்வெடுக்கலாமென்றால், திரையில் அந்த விண்கலத்திலிருந்து வீடியோ அழைப்பு வந்தது. மெல்லிதான கோபத்துடன் புருவங்கள் குவிய சிந்தித்தாள். இதுவரை இரு கலத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர் யாரென்றோ, கலத்தில் ஏத்தனைப் பேரென்றோ தெரியாது. தமிழ் மொழி தெரிந்தவர்கள் என்று மட்டுமே தெரியும். சரி, அவர்கள் யாரென்று முதலில் அறிவோம் என நினைத்தவாறு தொடு-திரையில் விரல் பதிக்கவும், வீடியோ திரையில் மங்கலாய் ஒரு உள்ளங்கை திரை முழுக்க மறைத்திருந்தது தெரிந்தது. "பச்.." மெல்லிய ஏமாற்றமும் கோபமும் ஒருசேர கண்களை மூடி யோசித்தாள். விண்காவலருக்கு தகவல் அனுப்பிவிடவேண்டியதுதான்.

கண்களைத்திறந்தவளுக்கு திரையைப் பார்த்ததும் வியப்பு. திரையை விட்டு கைகள் அகல, ஒரு அழகிய குழந்தையின் முகம் தெரிந்தது. சிரித்தபடியே முகம் பின்னோக்கிச் செல்ல அந்தக்குழந்தையை ஒரு இளம்பெண் கைகளில் வைத்திருப்பது தெரிந்தது. தூரத்தில் ஓர் ஆண், கட்டுப்பாட்டு இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தான்.
தன் முகத்தைக் காட்டும் தூரத்தில் அமர்ந்து விடியோவை உயிர்ப்பித்தாள். அவளைப் பார்த்தவுடன் அவர்கள் சிரித்தபடியே கையசைத்தார்கள். "ஆவ்.. உங்களிடம் எப்படி இந்தக் குழந்தை?" முதலில் கேட்டாள். "இவள் எங்களின் புதல்வி, அவ்வை" அந்தப்பெண் இயல்பாய் முதலில் பேசினாள். குழந்தை கைகளிரண்டும் நீட்டிச் சிரித்தது. சிறிது நேரப்பேச்சிலேயே அவர்கள் இடையே சினேகம் வளர்ந்தது. அரசாங்கத்திற்குத் தெரியாமல் பெற்றெடுத்து வளர்க்கும் மழலையாம். வாழ்வது சூரிய கிரகங்களைத் தாண்டிய புதியதோர் சிறிய கிரகமாம். இன்னும் தனித்து வாழ்வதற்கு ஏற்ற சூழல் செய்யப்படாமல் இருப்பதினால் சூரிய குடும்பத்து கிரகங்களையே உணவிற்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் நம்பியுள்ளதாகவும் சொன்னார்கள். இவர்களைப்போல் சில ஆயிரம் பேர் அங்கு இருக்கிறார்களாம். அவளின் வியப்பு அகலவே இல்லை.
"பொறுங்கள். சந்திக்க வருகிறேன்". தமிழர் பண்பாடு மறவாமல், பல்வேறு பழங்கள் கொண்ட ஒரு பெரிய குளிர்பதனப் பெட்டியைத் தள்ளிக்கொண்டே இணைப்புக்கதவைத் தாண்டி நடந்தாள். சந்தித்தார்கள். பெயர்கள் தெரிந்துகொண்டார்கள். அவ்வையின் பெற்றோர்கள் - இளவேந்தன், தமிழ்ச்செல்வி. மங்கையிடம் தாவினாள் அவ்வை. மகிழ்வாய் இருந்தது அவளுக்கு. அவர்கள் நிறையப் பேசினார்கள். "சரி. நான் அரசாங்கத்திடம் உங்களைப் பற்றி சொல்ல மாட்டேன் என எப்படித் தெரியும்?" வினவினாள். "உங்களை நம்பலாம் என பிரேம் தான் சொன்னான்" என்ற இளவேந்தன், "ஆம். பிரேம் எங்களின் நண்பன். எங்களுக்கு பல உதவிகள் செய்பவன். எங்களின் விண்கலம் இயந்திரக் கேளாறு பற்றி கேள்விப்பட்டதும் நீங்கள் வருவதைப்பற்றி தகவல் அனுப்பினான்..."
பகுதி-5 : மீண்டும் சந்திப்போம்
"ஓ, அப்படியா?" முகம் மலர்ந்தாள், "என்னைப்போல் இல்லாமல் அவ்வைக்கு பெற்றோர் நீங்கள் இருப்பது மகிழ்ச்சி". திரையில் வான்வழி நிலையத்ததிற்கு சிறிது நேரத்தில் சென்றடைவோம் என்ற செய்தி வந்தது. "நாங்கள் வர இயலாது. பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும். பிரேம் வருவதாக ஏற்பாடு." தமிழ்ச்செல்வி கூறினாள். "நானும்தான் சந்திக்க வேண்டும். நானும் உங்களுடன் இருக்கிறேன்." அவள் சொல்லிய படியே தகவல்கள் சென்றன. சில மணித்துளிகளில் பிரேம் வந்துவிட்டான், உயரமாய், ஒரு விண்வெளி-கால்பந்து விளையாட்டு வீரன் போல் தோற்றமளித்தான். ஒரு புதிய விண்கலத்தை அவ்வையின் பெற்றோருக்காக எடுத்து வந்திருந்தான்.
மங்கை ஓடிச்சென்று அவர்களுக்காக பல்வேறு பயிர்களின் விதைகள் அடங்கிய பெட்டி ஒன்றை எடுத்து வந்து பரிசளித்தாள். "மீண்டும் சந்திப்போம்" அவ்வையை அவள் முத்தமிட்டு வழியனுப்பினாள். அவர்கள் விடை பெற்றதும், தன் தாயைப் பற்றி கேட்டாள். "இதோ, சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன். இங்கே 'மூன்-வாக்' வான் நிலையத்திற்கே வந்துவிடுவார்கள். நான் பழுதடைந்த இந்த வாகனத்தை சரிபார்க்க கொண்டு செல்ல வேண்டும். உன் கைத்தொலைதொடர்பு கருவியில் உன் தாயின் தகவல் வரும்" என்றான். "அது சரி.. என்ன பிரேம், வாகனம் பழுதடைய வைத்தது நீதானே?" கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். "ஆம் மங்கை, உண்மையில் பழுதடையவே இல்லை. பழுதடைந்தது போல் பாவனை மட்டும் காட்டும் வித்தையை நான் தான் செய்தேன்." சிரித்தான். "அடப்பாவி... இளவேந்தனின் முகத்தில் நிலவிய அமைதியினைப் பார்த்தபொழுதே சந்தேகம் வந்தது. உன் சிரித்த முகத்தைக் கண்டவுடன் புரிந்தே விட்டது. என்ன விளையாட்டு இது? எதற்கு இதெல்லாம்?"
"உன் உதவி எங்களுக்கு தேவைப்பட்டது மங்கை. நோக்கத்தைப் புரிந்துகொண்டால் உதவி செய்வாய் எனத் தெரியும். அதனால் தான் இவர்களைச் உன்னைச் சந்திக்க வைத்ததேன். நீ இந்த புதிய அமைப்பில் சேர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் விருப்பம்".

"புரிந்துகொண்டேன் பிரேம். நான் என் தாயை என்னோடு யுரோப்பாவிற்கு கூட்டிச் செல்கிறேன். அந்தப் புதிய கிரகத்திற்கும் நாம் பிறகு செல்லலாம். சரி, இப்பொழுது என்ன செய்ய வேண்டும் சொல்" கேட்டாள் மங்கை. "அடுத்த வாரம் ஒரு நபரைச் சந்திக்க இதுபோலவே ஏற்பாடு செய்கிறேன். அவரையும் நம் இயக்கத்தில் சேர்க்க வேண்டும். முடியுமா??".
"முதலில் என் தாயைப் பார்க்க வேண்டும். பிறகு சொல்கிறேனே.." விடையளித்தாள்.வான் நிலையத்தில் தாயைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்தாள். மங்கையைப் போலவே இருந்தாள் அவளின் தாய். நிலவில் விண்வெளிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் வேலையாம். பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டாள். நூறு முறை "அம்மா" எனக் கூப்பிட்டு சிரித்தாள். இருவரும் தாங்கள் வளர்ந்த கதையை சொல்லியும் கேட்டும் - சிரித்தபடியும் அழுதபடியும் அன்றையப் பொழுதை ஓட்டினார்கள். இனி அவர்களுக்குப் பொற்காலம் தான்.
இவையெல்லாம் நடந்ததிற்கு அடுத்த விடுமுறை நாளில் யுரோப்பாவிற்க்கும் நிலவுக்கும் இடையே எங்கோ வான்வெளியில் பயணம் சென்றுகொண்டிருந்த்தான் யுவன், வானவியல் தொழில்நுட்பத்தில் வல்லுனன். தனியே ஆராய்ச்சிகள் செய்து அவைகளை யு.எஸ்.ஐ. க்கு இலவசமாகத் தருபவன். திடீரென்று அபயகுரல் தகவல் ஒலித்தது. "என் பெயர் மங்கை. நாங்கள் வந்த விண்கலம் பழுதாகிவிட்டது. நிலவுக்குச் செல்ல வேண்டும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"

தூரத்தில் நட்சத்திரம் ஒன்று கண் சிமிட்டியது !-- முற்றும் --

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

13 comments:

ராசுக்குட்டி said...

வாங்க முரட்டுக்காளை... நல்ல கதையொன்றோடு களத்தில் குதிச்சுருக்கீங்க

விஞ்ஞானக் கதையை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறீர்கள்... வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

இனி விசில் பறக்கும்-ல தொடர்ந்து!

Anitha Pavankumar said...

Great Story Raj
Especially one day/3 day concept ellam..sujatha rangeku ezhudirukkinga..
All the best.

முரட்டுக்காளை said...

//விஞ்ஞானக் கதையை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறீர்கள்...

ராசுக்குட்டி, வாழ்த்தியதிற்கு நன்றி.

ரொம்ப நாளா யோசிச்சு வைத்திருந்து கடைசியில் நேரம் கிடைக்காம அவசரமா எழுதி அடிச்சு பிடிச்சு இந்தப் பதிவுக்கு போட்டாச்சு. போட்டிக்கும் அனுப்பி வைத்தாச்சு.

உங்களோட கதையும் நம்மளைப் போலவே பெரிய்ய கதை.. :-)
நல்லா வந்திருக்கு..

//sujatha rangeku ezhudirukkinga..

நன்றி, அனிதா. சுஜாதா அளவுக்கெல்லாம் இப்போ போக முடியாதுங்க.. இது தான் நம்ம முதல் முயற்சி.. ஊக்கம் வர தொடர்ந்து எழுதுவேன்.

முரட்டுக்காளை said...

(நமக்கு நாமே திட்டத்தின் படி )

இப்போத்தான் வலைப்பூ தொடங்கும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தது.

இன்னும் தேனீ யுனிகோட் எழுத்துரு கூட சேர்க்க முடியவில்லை. டெம்ப்ளேட் ஏற்க மாட்டேன் என்கிறது. தமிழ்மணத்தில் பதியவும் முடியவில்லை. செய்தியோடை வரவில்லையாம். எல்லாம் இந்த பிளாகர் பீட்டா செய்த மாயம். பார்க்கலாம். இந்த வார இறுதிக்குள் முயற்சி செய்து சரி செய்ய வேண்டும்.

(நம்ம நண்பன் அப்பவே சொன்னான்.. வேணாம் மச்சி, ரொம்ப பில்டப்பு வேண்டாம். நீ ஒண்ணும் கைப்பு கிடையாது..)

jpg படமாக கதையை வெளியிடும் முடிவு எடுக்கப்படாமல் போயிருந்தால் கதையை வெளியிட்டிருக்க முடியாது.

சரி, இந்தக் கதை எப்படி இருக்கு என்று நம்ம வலைப்பூவிற்கு வந்து எட்டிப்பார்ப்பவர்கள் தயவு செய்து இந்த பீட்டாவை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் சொல்லுங்கள். புண்ணியமாய்ப் போகும்.

- :-( ராஜ்

ராசுக்குட்டி said...

முரட்டுக்காளை, அசத்திட்டிங்க,

முதல் பதிவு
பீட்டா வெர்சன் பிரச்சனைகள்
மறுமொழிகள் கூட வராத சோகம்

எல்லாவற்றையும் மீறி 4-வது பரிசு, இது சாதனைதான் நிச்சயமாக! இதையே ஊக்கமாகக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்! பதிவுகளில் இனி நிறைய சந்திப்போம்!

இன்பா said...

சிறந்த கதையை அளித்ததிற்க்கும், போட்டியில் வெற்றி பெற்றமைக்கும்,வாழ்த்துக்கள்.

முரட்டுக்காளை said...

ராசுக்குட்டி, மிக்க நன்றி. நீங்க வெற்றி பெற்றதிற்கும் வாழ்த்துக்கள் பல !

வாழ்தியதிற்கு நன்றி இன்பா !

(நம்ம பீட்டா பிளாக் கூட இப்ப தமிழ்மணத்தில் சேத்துக்கிட்டாங்க.. )

rishi_sethu said...

arumayana sinthanai. ethuvum nadakkalam. mars la water mattum iruntha unga kathaiyn sila meyakalam. vetrikku vazhthukal

rishi_sethu said...

hi, nalla kathai. ithu nadakkalam . verum karpanaya kolla mudiyathu. best wishes

தம்பி said...

இப்போதான் படிச்சேன். வித்தியாசமான களம். விஞ்ஞான சிறுகதை அருமையாக இருந்தது.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

முரட்டுக்காளை said...

நன்றி rishi_sethu !!

//வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். //

நன்றி தம்பி-ன்னா...

Nageshwaran said...

Raj..first time unga blog padichaen...romba nalla ezhudi irukeenga...congrats and keep it up...
Sooper science fiction story!

- Nagesh

Nageshwaran said...

Hi Raj..excellent...romba nalla irundhadhu..keep it up!. Expecting more stories like this from u!

Sooper science fiction...