Saturday, September 30, 2006

போட்டிக்குன்னு நாமளும் கதை எழுதிய கதை..!


செப் '06 தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய என் கதை "நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" நான்காம் இடத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டபோது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஏனென்றால் புதிதாக வலைப்பதிவுகளுக்கு வந்தவன் நான். வலையில் நம் கதை வெளிவந்து பலரின் நட்பும், விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்த பொழுது இன்னும் எழுத ஊக்கம் பிறந்திருக்கிறது.

இதில் சின்னச் சின்ன சுவராஸ்யங்கள் இருக்கின்றன. அதுதான் இந்தப்பதிவின் தலைப்பாக கொடுத்துள்ள நாம போட்டிக்கதை எழுதிய கதை..!

பதிவு தொடங்காவிட்டாலும் தமிழ்மணமும், தேன்கூடும் பல நாட்களாகப் படித்து வந்தவன் நான். சீக்கிரம் தொடங்க நண்பர்களின் வற்புறுத்தல் வேறு. நமது ஆர்வமும் அதிகரித்தது. ஆனால் இந்தக் கதைகளுக்கெல்லாம் சுறுசுறுப்பாக விமர்சனங்கள் எழுதினாரே 'சோம்பேறி பையன்'; அவர் பெயரைக் அவரிடமிருந்து கைப்பற்ற காப்பிரைட் வழக்கு தொடரும் அளவிற்கு நாம உலக மகா சோம்பேறி.

பின்னே என்னங்க..? "உறவுகள்" தலைப்புக்கே நாம யோசிச்சு வச்சிருந்த கதைதானே இது. என்னது..? எனக் கேட்பவர்கள் இப்பவும் போய் கதையைப் பாருங்க, தெரியும். யோசிச்சுகிட்டே இருக்கையில நாட்கள் வேகமா ஓடிடுச்சு. அலுவல்பளு தாங்காம வார இறுதிகளிலும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததில பதிவு தொடங்கக் கூட முடியல. பரிசுகள் எல்லாம் அறிவிச்சு, கள்ளவோட்டு, பரிதாப ஓட்டு போட்டுட்டாங்க என்ற சோகங்களும், கோபங்களும் பதிவுகளா வந்துபோய் எல்லாமே முடிஞ்சுபோச்சு.

நாம மட்டும் நம்ம கதைய மனசுலெ வச்சுகிட்டு உக்காந்து வழக்கம் போலவே யோசிச்சிட்டு இருக்கோம். அப்பதான் "லிப்ட்" கேட்கற இந்தத் தலைப்பு. ஆகா!

"என்ன கதைடா எளுதப்போறே?"ன்னு கேட்ட ஒருத்தன்கிட்டே - "டேய் மச்சி, எல்லாரும் பைக்குல லிப்ட் கேட்பான்; கார்ல லிப்ட் கேட்பான்; ஏன் லாரில கூட லிப்ட் கேட்பான்; நாம கொஞ்சம் வித்தியாசமா ஸ்பேஸ் ஷிப்-லேயே ஒரு லிப்ட் கேக்கிறோம் பாரு; அந்த இடத்தில தான் கதை, திரைக்கதை, டைரெக்ஷன்-ன்னு நம்ம பேர் போடறோம்". நம்ம கதையை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளார எழுந்து ஓடியே போயிட்டான் அவன்.

சரி, இந்த முறை எப்படியும் பதிவு தொடங்கி கதையை அனுப்பிடனும்-னு முடிவு செஞ்சாச்சு. நள்ளிரவில வேலை விட்டு வந்தாலும் பேப்பரில் கதைக்காக குறிப்புகள் எழுதத் தொடங்கியாச்சு. கூகிள் தேடல் நிறைய செஞ்சு கிரகங்கள், அவை ஒரு சுற்றுபாதை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (85/24 ~= 3 1/2) எல்லாம் யோசித்து யோசித்து எழுதியாச்சு. போட்டோக்களும் எடுத்து வைத்தாச்சு.

அடித்து திருத்தி மாற்றியெழுதி, அப்பப்பா..

உறவுகளுக்கான அர்த்தமே தொலைந்து போகும் அபாயம் இருக்கும் வருங்காலத்தில் எப்படி ஒரு வலுவானதாய் உள்ள தாய்-சேய் உறவு தானாகவே புதுப்பித்துக்கொள்கிறது என்பதாக நாம உருவாக்கியிருந்த கதையில், உறவுகளைக் கதையைக் கொஞ்சம் குறைத்து "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" - தலைப்பை சரியாகச் சேர்க்க நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

பீட்டா செய்த மாயம், நம்ம பதிவு தமிழ்மணத்தில சேர்க்கவே ரொம்ப நாளாயிடிச்சு (தேன்கூட்டில் முதலிலேயே ஓகே). கதையை வித்தியாசமா படங்களா வெளியிட்டாச்சு. (பின்னால், தேன்கூட்டில் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க எழுத்து வடிவிலும் சேர்க்கப்பட்டு வந்தது கதை).

எல்லாம் முடிஞ்சும் கதை படிக்க யாருமே வரலை. சரி, நாம ஒரு நடை எல்லா கதைகளுக்கும் போயிட்டு வந்திடுவோம்-னு பொடி நடையா கிளம்பியாச்சு. எல்லா படைப்புகளையும் படிச்சவன், ஒரு வழியா (ஒரு வரியா) விமர்சணமெல்லாம் எழுதி, பலரையும் ஈர்த்தது; எல்லா பதிவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய போதே நம்ம போட்டிப் பதிப்பிற்கும் வெளிச்சம் போட்டு பலரை படிக்க வைத்ததெல்லாம் ஒரூ யுக்திதான். இதில் நமக்கு பல வியப்புகள். பல நட்புக்கள். பல பாடங்கள்.

"சரி, ஒருவேளை கொஞ்சம் பதிவுகளை தொடங்க லேட்டாகி கதையை போட்டிக்கு அனுப்பும் முன்னாடியே அக்டோபர் '06 வந்திருந்தால் என்ன செஞ்சிருப்பே?"-ன்னு கேட்டா, இதே கதைக் கருவில் கொஞ்சம் மாற்றி விண்வெளியுகத்தில் அரசாங்கதின் தனிமனித உறவுகளின் மேலான ஆதிக்கத்தை எதிர்த்துக் வெடித்துக் கிளம்பும் ஒரு புதிய விடுதலைப் போராட்டமாக வெளியிட்டிருப்பேன் :-) னு தான் சொல்லணும்.

சரி சரி, இவை எல்லாம் இருக்கட்டும். இந்த முறையும் தேர்வு முறையில் நடந்த குறைபாடுகளை பலர் அழுத்தமாக எடுத்துச் சொல்லியதில் மேலும் சில கட்டுப்பாடுகள் செய்துள்ளார்கள் தேன்கூடு நிர்வாகத்தினர். வரவேற்கத்தக்க விஷயம் இது - நல்லதொரு போட்டிக்கான வழிவகைகளை இவை பலப்படுத்தும்.

ஆசாத் அவர்கள் "விடுதலை"-ன்னு அருமையான தலைப்பும் கொடுத்தாச்சு. 18-ம் தேதியே கடைசித்தேதியாம். நம்ம கதைகேட்டு உக்கார்ந்திருந்த எல்லாரும் ஓடுங்க, போய் ஒரு நல்ல கதையோடு களத்தில குதியுங்க. நாமளும் இந்த முறையும் வித்தியாசமா சிந்திக்கணும்.

என் கதையைப் படித்து மகிழ்ந்த, படித்து ஓட்டுப்போட்ட, படித்துவிட்டு பிடிக்காததால் ஓட்டளிக்காத பலருக்கும் அதைப்போலவே கதையை விமர்சித்த, பின்னூட்டமிட்ட, பாராட்டிய, தனிமடல் எழுதிய அனைவருக்கும், போட்டியில் கலந்துகொண்டதும் தனிமடல் இட்டு ஆலோசனைகள் அளித்த தேன்கூடு போட்டிக் குழுவிற்கும், என் விமர்சணங்களையும் பலரின் பார்வைக்கு வைத்ததிற்கும் என் நன்றிகள் பல.

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

Friday, September 22, 2006

ஒரு வரியில சொல்லணும்னா...

எல்லா படைப்பையும் படிச்சிட்டு தான் ஓட்டு போடணும்னு முடிவு பண்ணியாச்சுங்கண்ணா. ஓட்டும் போட்டாச்சுங்க. நாம படித்ததில் மனதில் பட்டதை இங்கே சுருக்கமாக..


1. சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி - சிமுலேஷன்
"லிப்ட் கேட்பதிலேயே சிரிக்க வைக்கிறார்"

2. லிப்ட் - சிறில் அலெக்ஸ்
"நிதர்சனங்களைச் சொல்லும் ஒரு நல்ல படைப்பு"

3. போட்டிக்காக - வெண்பா - அபுல் கலாம் ஆசாத்
"வெண்பா எல்லாம், ஒரே கலகலப்பா..."

4. தவிப்பு - நெல்லை சிவா
"தவித்தாலும் தப்பித்தது மனசுக்கு நிம்மதி"

5. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? புதிர் - பினாத்தல் சுரேஷ்
"புதிர் போட்டு புதிர் போட்டு, புதிதாய் கதை படைக்கிறார்"

6. ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக - அபுல் கலாம் ஆசாத்
"இதுபோல் வெண்பா, இன்னும் வேண்டுமப்பா !"

7. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - சேவியர்
"எளிமையாய், அதே நேரம் வலிமையாய் !"

8. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - demigod
"லிப்ட் என்றால் பேயும் இரங்கும்"

9. கொஞ்சம் தூக்கி விடலாம்! - யதா
"சதா கதை கேட்பதை விட யதா சொல் கேட்பது அவசியம்"

10. லிஃப்டாவது கிடைக்குமே! / தேன்கூடு போட்டி - ஜி.கௌதம்
"ஒவ்வொரு வரியிலும் பதற வைத்து, கடைசியில் நம்மையும் கதற வைக்கிறார்."

11. லூர்து - சிறுகதை - போட்டிக்காக - அபுல் கலாம் ஆசாத்
"ஷேக் அலியின் மனதில் மட்டுமல்ல, நம் மனதிலும் உயர்வாய் நிற்கிறார் லூர்து"

12. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - Krishnaraj.S
"வாத்தியாரு கொடுத்த லிப்டை அவருக்கே கொடுத்திட்டாரு பெருசு !"

13. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - வசந்த்
"விழித்திழச் சொல்லும் ஒரு சிறு கவிதை"

14. லிஃப்ட் குடுக்கலியோ லிஃப்ட் - சனியன்
"இவர் சந்தர்ப்பத்தை நழுவ விட்டதில் ஏனோ நமக்குப் புன்னகை பிறக்கிறது"

15. இன்னா சார்? - வசந்த்
"கவர்னருக்கே லிப்ட் கொடுத்தவர வெச்சி கதைய லிப்ட் பண்ணியிருக்காருங்க"

16. சின்னதாக ஒரு லிப்ட் - யதா
"தைரியமாக எதிர்கொண்டால், வாழ்க்கையே ஒரு லிப்டுதான்"

17. லிஃப்ட் - மகேந்திரன்.பெ
"லிஃப்ட் நிற்பதற்குள் படித்துவிடக் கூடிய நாலு வரி சிரி-கதை"

18. கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..? - வசந்த்
"வரலாற்றுக் கதைக்களம். அழகான உரையாடல்களில்."

19. அன்புத் தோழி, திவ்யா..! - வசந்த்
"விட்டுக்கொடுத்தலும் லிப்டுதான்"

20. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா - 1,2,3,4,5 - ராசுக்குட்டி
"லிப்டு கேட்டு இவர் போகுமிடமெல்லாம் போய் வந்த இனிய உணர்வு. யதார்த்தமாய், பல பரிமாணங்களில் வியக்க வைக்கிறார்"

21. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - இளா
"வாழ்க்கையின் விளிம்புகளில் இருந்து திசைமாற்றி மனதை வருடிச்செல்லும் இனிய காதல் கதை"

22. சாந்தியக்கா - பாலபாரதி
"என்றைக்காவது, யாருக்கேனும் இதுபோல் நம்பிக்கையளிக்க வேண்டும் என அழுத்தமாய் ஒரு பாதிப்பை உருவாக்குகிறது இக்கதை."

23. இதுவேறுலகம் - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"செல்வத்திற்கு ஒளிக்கற்றை வடிவமாய் ருக்கு; மணிக்கு வாழ்வில் ஒளியேற்றும் செல்வம்; வியக்க வைக்கிறது கதை"

24. நிலா நிலா ஓடி வா! - luckylook
"மிக மிக வித்தியாசமாய் விண்வெளியில் கதைக்களம்; ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது."

25. சில்லென்று ஒரு காதல் - நெல்லை சிவா
"சில்லென்று ஒரு காதல், மின்னல் வேகத்தில்"

26. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 1 - யோசிப்பவர்
"42ஆம் பதிவுக்குச் செல்லவும்"

27. மம்மி..மம்மி.. - வசந்த்
"எப்போ கேட்டாலும் கிடைக்கும், அலுக்காத லிப்ட் இது."

28. லிப்ட்டு ஸ்கிரிப்டு ஆக்ட்டு - kappiguy
"எல்லோரையும் வைத்து கமெடி கீமெடி செய்துவிட்டது இந்தப் பெரிய பட்ஜெட்டு ஸ்கிரிப்டு :-D"

29. முனி அடி (தேன்கூடு போட்டி) - செந்தில் குமார்
"அதிர வைக்கும் நிஜ நிகழ்வைப் பதிக்கும் கதை. பொய்த்துப் போகாதோ இக்கணமே?"

30. விரல் பிடிப்பாயா..? - வசந்த்
"பாட்டியைத் தந்தை பிரிந்ததைவிட விரைவாய்; தந்தையைத் தான் பிரிந்ததை விட விரைவாய்; தன் மகள் தன்னைவிட்டுப் பிரியப் போவது அறியாமல்..."

31. அண்ணே..லிப்ட் அண்ணே..! - வசந்த்
"இறுதிவரை யூகித்ததெல்லாம் இல்லாமல் புதிய கோணத்தில் திரும்பும் அருமையான சிறுகதை."

32. முன்னாவும் ,சில்பாவும். - umakarthick
"'இந்த வயசுல இதுலாம் சகஜம்னு பெற்றவர்களுக்கு புரிந்திருந்தால் வேறுமாதிரியல்லவா போயிருக்கும் முன்னாவின் கதை"

33. சபலம் - saran
"பேய் சொல்லும் சிறுகதை. யூகித்துக்கொள்ளுங்கள்."

34. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - Udhayakumar
"போன் போனதுக்கு அழுவதா? இல்லை போன போன் பழசுன்னு சிரிப்பதா?"

35. konjam lift kidaikkuma?? - Rajalukshmi
"அழகாய்த் தோன்றுகின்றன; சிறு சம்பவங்களும்; இக்கவிதையில் வந்ததினால்."

36. லாந்தர் விளக்கு. - வசந்த்
"அவுங்க எல்லாம் பத்திரமாப் போய்ச்சேந்தாங்களா? அட அந்தப் பொன்னம்மா கிழவியாச்சும் பத்திரமாப் போய்ச்சேந்தாங்களா?"

37. ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக - ஜி.கௌதம்
"உயரம் தூக்கிகள் உயரம் அனுபவிக்குமா என்ன? ஏறிச்சென்றவர்களில் ஒருவரேனும் கொஞ்சம் கை(லிப்ட்) கொடுத்திருந்தால்."

38. சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) ! - கோவி.கண்ணன்
"மாற்றங்களைச் சுமையாகக் கருதாமல் வரவேற்றால் அவைகளே வாழ்வை லிப்ட் செய்யும் - சொன்ன விதம் அருமை."

39. லிப்ட் ப்ளீஸ்!!! - வெட்டிப்பயல்
போஸ்டன் பாலா சொல்லியது போலவே "ராஜேஷ்குமார் நாவல் போல் ஒரேமூச்சில் படிக்க வைத்த க்ரைம் த்ரில்லர்"

40. கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா - pavanitha
"தந்தைக்கும் மகனுக்குமான உறவுப் போட்டியைப் பெருமையுடன் சொல்வது நிறைவாய் இருக்கிறது. சூப்பர் கதை."

41. லிப்ட் கிடைக்குமா? (தேன்கூடு போட்டி) - madhumitha
"வாழ்க்கை எனும் லிப்ட்-டில் ஆபரேட்டர்களாய் மனிதர்கள். லிப்ட் கொடுத்தும் லிப்ட் வாங்கியும்.."

42. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 2 - யோசிப்பவர்
"இங்கிருந்து 63க்கு சிரமம் பார்க்காமல் செல்லவும்"

43. காடனேரி விளக்கு (சிறுகதை) - MSV Muthu
"வித்தியாசமாய் சொல்லியிருக்கிறார். விறுவிறுப்புக்குக் குறைவில்லை. ஏய் யாருப்பா அது காடனேரி விளக்கு கேட்டது?"

44. கண்டிப்பாடா செல்லம்... - ramkumarn
"கண்டிப்பாடா செல்லம். கண்டிப்பா படிக்க வேண்டிய கதை. வெகு யதார்த்தம்"

45. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - 55 fiction - மாதங்கி
"?"

46. நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - முரட்டுக்காளை
"நம்ம கதைதான், படித்துப்பாருங்க. பிறகு எப்படி இருக்கு சொல்லுங்க."

47. சர்தார்ஜி ஜோக் ஒன்று.... கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - ramkumarn
"புன்சிரிப்பு மினிமம் கியாரண்டி"

48. லிப்டாக இருக்கிறேனே..! - வசந்த்
"வசந்த் என்றாலே வரும் எதிர்பார்ப்பை விட அதிகம் தந்திருக்கிறார். படிக்க வேண்டிய கதை."

49. அவன் கண்விடல் - குந்தவை வந்தியத்தேவன்
"லேசாய்ப் பொறி தட்டினாலும், இன்டலிஜென்ஸ் பீரோ ஏஜன்டுகள் வந்து எழுப்பி விடும்போதுதான் நமக்கும் புரிகிறது."

50. கடவுள் கேட்ட லிஃப்ட் - சேவியர்
"கடவுள் வந்து லிஃப்ட் கேட்டது மட்டுமில்லாமல், பயமுறுத்தியும் வைக்கிறார்"

51. அவள் - நிர்மல்
"நமக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல நிர்மல்"

52. எங்க வீட்டு ராமாயணம் - சிதம்பரகுமாரி
"கீர்த்தனா இன் வொண்டர்லேண்ட்"

53. பாகிஸ்தானியுடன் ஒரு லிஃப்ட் - என் அனுபவம்! - உமா கதிர்
"இந்த அனுபவம் சில அனுமானங்களையும் மீறி ஆச்சரியம் அளிக்கிறது."

54. போட்டி: பதிவுக்கு மேய்க்கி - bsubra786
"கூகிள் குதிரையில் லிப்ட் கேட்டு நம்மைப் பல இடங்களுக்கு கூட்டிச்செல்கிறார்"

55. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - வலைஞன்
"சிகரம் எட்டுமென்ற நம்பிக்கையே நமக்கும் உரமாய்"

56. தேன்கூடு போட்டிக்கு - வலைஞன்
"நிமிடத்தில் படிச்சிடலாம். வியப்பு தான் அகல சிலநேரம் பிடிக்கும்."

57. லிஃப்ட் கொடுத்தவர்கள் - அஹமது சுபைர்
"அந்தப் பெயர் தெரியாத பைக்காரர் லிப்ட் கொடுத்த விதம் பாரட்டுக்குரியது"

58. ஒரு தலைப்புச் செய்தி - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"ஒரு சிறு பொறியை வைத்து தீவிரவாதியை வளைத்குப் பிடிக்கும் இந்தப் போலிஸ் கதை உன்மையைல் போலிஸுக்கு ஒரு லிப்டுதான்."

59. லிப்ட் கிடைக்குமா மீனாட்சிக்கு? - barath
"ஓவியம் வாங்கியதில் மீனாட்சிக்கு கிடைத்த லிப்டைப் போலவே இந்தக் கதையும் அவளைப் போன்றோருக்கு லிப்டாய் மலர்கிறது."

60. மீட் த பெஸ்ட் ஃப்ரெண்ட் - தமிழில் - சரவ்.
"பயமுறுத்தாமல் ஒரு பேய்க்கதை. அதை மீண்டும் படிக்கத் தூண்டும் பாணி மிக அருமை."

61. மொழிபெயர்ப்பு - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"அது பூனை இல்லை எனத்தெரியும் நேரத்தில் த்ரில்லர் மாறி சோகம் அப்பிக்கொள்கிறது. அச்சோ."

62. தூக்குங்கள் தூக்குங்கள் - Ilackia
"நாம் படிக்க முயற்சிக்கையில் பதிவுகான பக்கமே கானாமல் போய் புதிர் போடுகிறது"

63. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - 3 - யோசிப்பவர்
"கடேசியாக ஒருமுறை, கடைசிப் பதிவுக்கு (72) உடனடியாகச் செல்லவும்"

64. தூக்கல் வாழ்க்கை - நடராஜன் ஸ்ரீனிவாசன்
"நல்லாவே புரியுதுப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா - அருமை"

65. தீயினால் சுட்ட புண்!!! - வெட்டிப்பயல்
"நம்ம ஊரு காதல் கதை ஜெயிக்காம போகுமா? கலக்கல் கதை"

66. அவசரமாய் போய்கொண்டிருந்தேன்... - தொட்டராயசுவாமி
"அவசரமாய் ஆட்டோவில் போய்கொண்டிருந்த வேகத்தை விட அவசரமாய் ஒரு கவிதை."

67. மெளனம் கலைந்தே ஓட.. - வசந்த்
"உணர்வுகளின் வலியும், வலிமையும் இக்கதைக்கு லிப்ட் கொடுக்கிறது."

68. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா- தேன்கூடு போட்டி - Anamika
"வராமல் போன பேருந்துக்கு கூடுதலாய் ஒரு நன்றி. இல்லையா பின்னே, இந்தக் கவிதை கிடைத்திருக்காதே"

69. அல்லக்கை - தேன்கூடு போட்டி சிறுகதை - இன்பா
"லிப்ட் என்ற வார்த்தையே கதையில் வராவிட்டாலும், தலைவர்களை லிப்ட் கொடுத்து பார்க்க ஆசைப்படும் தொண்டனைப்பற்றிய கதை"

70. மனசில் லிப்ட் கிடைக்குமா - சேவியர்
"மங்கை மனசில் லிப்ட் கேட்டு வருகிறது சிறுகவிதை; நம் உள்ளங்களிலும் லிப்ட் ஆகிறது."

71. அய்யா!, கொஞ்சம் கருணைகாட்டுங்கய்யா!! - kalaimarthandam
"தீர்க்கமாய் ஒரு முடிவுடன் முடியும் கதை, அதனை நம்மிடமும் விதைத்து விடுகிறது."

72. எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? - யோசிப்பவர்
"இன்னுமா தெரியவில்லை,
இது டைம் டிராவல் கதையென்று :-D "


சரி, நாம சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு. தப்பா எதுவும் சொல்லி இருந்தா சொல்லுங்க, திருத்திக்கிடலாம்.

தலைப்பு கொடுத்தவரு பேரு வந்துங்க :
'கொங்கு' ராசா,
சுறுசுறுப்பா விமர்சிச்சவரு பேரு
வந்துங்க : சோம்பேறி பையன்
ஆச்சரியப்பட வைத்தவரு பேரு வந்துங்க : வசந்த்



எல்லா படைப்புகளும் அருமை. படிச்சுப்
பாருங்க.

மறக்காம ஓட்டும் போட்டுடுங்க. உங்க ஓட்டு உண்மையிலேயே திறமைசாலிகளுக்கு லிப்ட் கொடுத்த மாதிரி இருக்கும் !

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்


Friday, September 15, 2006

நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?

தேன்கூடு போட்டிக்கு...!






இதோ, இக்கதை எழுத்து வடிவில்.

நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
பகுதி-1 : மங்கை, யுரோப்பா மற்றும் டி-யி - அறிமுகம்
மங்கை கண் விழித்து எழுந்த பொழுது யுரோப்பாவில் நேரம் சரியாக 21:43 ஆகிவிட்டிருந்தது. அறையெங்கும் தவழ்ந்து வந்த மெல்லிசையை சோம்பல் முறிக்கும் கை அசைவிலேயே குறைத்து விட்டு, தலையைத் திருப்பி அந்த சிறிய சாளரக் கண்ணாடி வழியாகப் பார்த்த பொழுது ஜூபிட்டர் கிரகம் சூரிய வெளிச்சத்தில் தங்க நிறத்தில் தகதகத்தது. இதற்காகத்தான் இதற்குச் செலவாகும் இ-யுனிட்ஸ் அதிகமானாலும் சரிதானென்று இந்த உயரத்தில் இடம் வாங்கித் தங்கிவிட்டிருந்தாள். டைட்டனில் கூட இதுபோல் காட்சி காணக் கிடைக்காதே!
"மேன்..!! விழித்து விட்டாயா?" எனக் கேட்டவாறே பறந்து வந்தது யுரோப்பா வடிவிலான குட்டி ரோபோ. ஆதன் ஆங்கிலச் செல்லப்பெயர் டக்-எக். அவள் வைத்தது. "ஏய் டி-யி..." அதனை இரு கைகளாளும் பிடித்து தலையை ஆட்டி "மேன் இல்லை... மங்கை...!" சொல்லிக் கொடுத்தாள்.. "ஹ்ம்.. புதியதாயிற்றே, பயிற்சியளிக்க வேண்டும்." என எண்ணிக் கொண்டே எழுந்தாள்.
ஜூபிட்டர் கிரகத்தைச் சுற்றும் பல நிலாக்களில் யுரோப்பாவும் ஒன்று. அங்கு ஒரு நாள் என்பது 85 மணி நேரங்கள் கொண்டது. மூன்று 24 மணி நேர பூமி-நாட்களில் 8 மணி நேர வேலை நேரங்கள் - இரண்டு சூரிய வெளிச்சத்திலும், ஒன்று இரவுப்பொழுதிலுமாய். பின்னர் மிச்ச நேரம் ஓய்வு. ஓய்வெங்கே எடுக்கிறார்கள்? கிரகம் விட்டு கிரகம் பறந்தல்லவா திரிகிறார்கள் மக்கள்.
இது வருடம் 2082. கலிலியோ தொலைநோக்கியில் கண்டுபிடித்த யுரோப்பாவா இது? இங்கு மனித இனத்தின் விண்கலம் இறங்கி 23 வருடங்கள் ஆகி விட்டிருந்தன. வந்த நான்கு வருடங்களில் - வானுயர குடியிருப்புகள் அமைத்து மக்கள் தங்குமளவிற்குத் தயார் படுத்தியாகிவிட்டது. நீர்வளம் இருப்பினும் இன்றும் பூமியிலிருந்தும், செவ்வாயிலிருந்தும் உணவும், இதர மூலப்பொருட்களும் தருவிக்க வேண்டிய நிலமைதான்.
யுரோப்பாவின் இயற்கைக் கணிம வளங்களை ஆராய்ச்சி செய்யும் ஒருங்கிணைந்த இந்தியத் துணைக்கண்டம் - யு.எஸ்.ஐ. - யின் பெருமைக்குரிய ஆராய்ச்சிக்குழுவின் தலைமை ஆராய்ச்சியாளினி மங்கை. எப்படியும் இங்கு பச்சைத்தாவரங்கள் வளர வைத்து விடுவது அவர்களின் நோக்கம். பூமியிலிருந்து மண் எடுத்துதான் இதுவரை உணவுப்பயிர்கள் வளர்க்க முடிந்துள்ளது. மரங்கள் நிறைந்த காடுகள் வளர்க்க இவை போதாதே.பகுதி-2 : இட்லி முதல் ஈமெயில் வரை
மங்கைக்கு இன்று முழுவதும் விடுமுறை - அதாவது மூன்று பூமி-நாட்கள். என்ன செய்வதென அழகாய் புருவங்கள் சுருக்கி யோசித்தாள். பிறகு தன் விரல்களை நீட்டியபடியே கையசைக்கவும் எதிரில் இருந்த சுவற்றின் வண்ண ஓவியம் மறைந்து, மாபெரும் கணிணித்திரை விரிந்தது. ஏற்கனவே பலமுறை படித்திருந்த ஈமெயில் செய்தியாய் இருந்தாலும் தேடி எடுத்துப் படித்தாள். பூமியில் ஆளுமைப் பொறுப்பில் உயர் பதவியிலிருக்கும் அவளின் உற்ற நண்பன் ப்ரேம் எழுதியிருந்தது. "உன்னைப் பெற்ற தாயின் பெயரும் இருப்பிடமும் கண்டுபிடித்தாயிற்று. வந்து போ. பார்த்துவிடலாம்."
"சாப்பிட என்ன வேண்டும் மங்க்க்.." விர்ரெனப் பறந்து வந்து அவளின் தலையை மையமிட்டு நீள்-வட்ட வடிவில் சுற்றிய படியே கேட்டது டி-யி. இதமாய்ப் புன்னகைத்தவள், "ஒரு நூறு வருடங்களுக்கு முன் தென் இந்தியர்கள் என்ன சாப்பிட்டார்கள் சொல்லேன். உடலுக்குத் தீங்கில்லாமல், கலோரி விகிதமும் சரியாக இருக்க வேண்டும்."; சொல்லிய மறுநொடியில் இடது பக்க சுவற்றில் டி-யி தயவில் படங்கள் சிறு கட்டங்களாய் விரிந்தன. "ஏய், என்ன அது?" அவள் கையை நீட்டவும் அவள் கைகாட்டிய அந்த விடியோ படம் பெரிதாய் விரிந்தது. "அது தான் இட்லி." என டி-யி சொல்லவும், "ஓ... இதுதானா, கேள்விப்பட்டிருக்கிறேன். சாப்பிட்டதில்லை. கிடைக்குமா?" கேட்டாள். திரையில், டைட்டனில் கிடைக்கும் என்ற விபரங்கள் வந்தன. "ஹ்ம்ம், இன்று ஒரு கை பார்த்துவிடலாம். வாங்கிவிடேன்... " சொல்லிக்கொண்டே கையசைத்த பொழுது, படங்கள் மறைந்து ஈமெயில் திரையைப் பார்க்க புதிதாய் ஈமெயில் செய்தி ஒன்று முளைத்திருந்தது.
தெரியாத ஈமெயில் முகவரி. "இது எப்படி விதிமுறைகளைத் தப்பித்து வந்தது?" மெல்ல இதழ் கடித்து யோசித்தாள். "இதன் இ-யுனிட் அளவு என்ன?" தேடிப்பார்த்ததும் உண்மை புரிந்தது. 22 என்று இருந்தது. இ-யுனிட் அளவு 20க்கும் மேல் இருந்தால் குப்பையாகக் கருதும் முன் காட்டவும் என ஈமெயில் விதிமுறைகளைத் தளர்த்தியது நினைவுக்கு வந்தது. 20 இ-யுனிட் அளவு அவளின் ஒரு மணி நேர உழைப்பின் பலன். அதனை வைத்து நிறைய்ய்ய பொருட்கள் வாங்கலாம். இப்பொழுதெல்லாம் புதியதாய் ஒருவரின் கவனத்தைக் ஈமெயிலில் கவர வேண்டுமென்றால் இ-யுனிட் மதிப்பளிக்க வேண்டும். அதை ஈமெயில் பெற்றுக்கொள்பவர் வைத்துக்கொள்ளலாம். இப்படித்தான் ஆயிரமாயிரம் குப்பை-மெயில்களை ஒதுக்க முடிகிறது.

"படித்துவிடலாம். என்ன ஆகிவிடும்" என செய்தியைத் தேர்வு செய்ய, அது திரையில் விரிந்தது.
தமிழில் எழுதப்பட்டிருந்தது. வேறு யாரும் படிக்க இயலாதபடி சிறப்பு பாதுகாப்பு முறையில் அனுப்பப்பட்டிருந்தது. பெயர் எதுவும் இல்லாமல், "வணக்கம். நாங்கள் பழமைவாதிகள் என அரசாங்கத்தால் குறிப்பிடப்படுபவர்கள். குடும்பம் என்றால் என்ன என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மீண்டும் குடும்பங்களாய் மனித இனம் மாற உங்களுக்கு விருப்பமா? மேலும் தகவல்கள் இந்த இடத்தில்" என தகவல்சுட்டி அடிக்கோடிடப்பட்டு இருந்தது. மங்கையின் கயல் விழிகள் விரிய மேலே பார்த்தபடி மீண்டும் ஒருமுறை சிந்தனையில் மூழ்கினாள்.
பகுதி-3 : பெற்றெடுத்தவள் யாரோ?
நிலவில் மனிதன் குடிபெயர்ந்த நாட்கள் முதலே பூமியில் பல மாற்றங்கள் நடந்தன. போர்கள் நின்றுவிட்டன. பல சிறிய நாடுகள் ஒன்றாய் இணைந்தன. உயிர் காக்கும் முறைகள் மேம்பட்டன. தாவர உணவுமுறை பழக்கத்திற்கு வந்தது. இயற்கை வளங்கள் மேம்பட்டன. அறிவியல் வளர்ச்சி விண்ணோங்கியது. ரோபோக்கள், திசுக்கள் மறுவளர்ச்சி, நானோ-டெக் இயந்திரங்கள், அதிவேக விண்கலங்கள், இன்னும் பல... உயர் தொழில்நுட்பமே பலம் எனப் புரிந்துகொண்ட மனிதர்கள் அறிவியல் அறிவறிதலில் கவனம் செலுத்தினார்கள். நிலவு, செவ்வாய்க்கிரகம், டைட்டன் என மனித இனத்தின் ஆளுமையை விரிவுபடுத்தி பல திக்கிற்கும் விண்கலங்கள் அனுப்பி வைத்தார்கள். இன்னமும் வேற்று கிரக வாசிகள் கண்டுபிடிக்காத நிலையில் மனித இனமே இந்தப் பிரபஞ்சத்தில் மேம்பட்டது என்ற எண்ணம் வளர்ந்தது.
ஆனால் சமூகம் சீரழிந்தது. குடும்பங்கள் அடியோடு ஒழிந்தன. சேர்ந்து வாழ்தல் என்பதே மறைந்து போனது. பிறக்கும் குழந்தைகள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட சட்டம் உருவாயிற்று. பெற்றோர் யாரெனத் தெரியாமல் வளர்ப்புக்கூடங்களில் வளர்ந்தன குழந்தைகள். இதெல்லாம் இன்று நேற்றல்ல. நாற்பத்தைந்து வருடங்களாகிவிட்டன. பாசமெல்லாம் பழங்கதையாகிவிட்டது.

மங்கையும் அப்படித்தான். பிறந்தது எங்கு எனக்கூட தெரியாமல் நிலவில் வளர்ந்தாள். தமிழ் கற்றுவிக்கப்பட்டதால் அதுதான் தன் தாயின் மொழி என்பது மட்டும் தெரியும். பள்ளியின் விடுதியில் வளர்ந்து, 19 வயதில் வேலைக்குச்சென்ற பிறகு தான் விடுதலைக் காற்றை சுவாசித்த உணர்வு. பெற்றெடுத்தவளைப் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் படிக்கும் வயதில், ரோபோ ஆசிரியை குழந்தைப் பெறுவதைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கையிலேயே துளிர்விட்டது. இன்று அந்த எண்ணம் உயர்ந்த மரமாய் வளர்ந்துவிட்டது.
மங்கை அதிவேகமாய்க் கிளம்பினாள். அவசரமாய் எலக்ட்ரானிக்-குளியல் முடித்து, பாதுகாப்பு உடை அணித்து கிளம்பி - இட்லி சாப்பிட்டது கூட நினைவில்லாமல், ரிவர்ஸ் பூஸ்ட்டர்கள் செலுத்தி திருப்பி அதிவேக விண்பாதையில் தன் கருப்பு நிற விண்கலத்தை செலுத்தினாள். நேராக நிலவிற்கு அருகில் உள்ள பழமைவாய்ந்த 'மூன்-வாக்' வான்வழி நிலையத்தில் இறங்கி அவளுடைய விண்கலத்தின் எரிபொருள் நிரப்பிவிட்டு பிறகு பூமிக்குப் போகலாம். போய்ச்சேர இன்னும் எட்டு மணி நேரம் ஆகும்; தானியங்கியை இயக்கிவிட்டு சற்று ஓய்வெடுக்கலாம் என இருக்கையயை விட்டெழுந்த சில மணித்துளிகளில் ஓர் அபயகுரல் தகவல் கேட்டது.
விண்கலத்தின் கட்டுப்பாட்டுத் திரையில் விபரங்களைப் விரிவுபடுத்திப் பார்த்தாள். அவளின் விண்கலத்தைப் போன்ற வேறு ஒரு கலம் பயணப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரிந்தது. தானியங்கியை நிறுத்தி, வேகத்தைக் குறைத்து "என்ன வேண்டும்?" என ஆங்கிலத்தில் பதில் தகவல் அளித்துவிட்டு அந்த விண்கலத்தைப் பற்றிய தகவல்களைச் கவனமாய்ச் சரிபார்த்தாள். இது ஒன்றும் விண்கொள்ளையர்களின் கலம் இல்லை. பாதுகாப்பானதுதான்.
பகுதி-4 : கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" என கலப்புத் தமிழில் பதிலோடு வினா வந்தது.
தன் வாழ்க்கைத்தடம் இந்த நொடியிலிருந்து மாறப்போவது தெரியாமல் "விண்காவலர்கள் வரவில்லையா?" என பதில் அனுப்பினாள் அவள், இம்முறை தமிழில். "இரண்டு மணிநேரம் தாமதம் ஆகுமாம். அதுவரை இங்கிருக்க விருப்பமில்லை. நிலவுக்குத்தான் பயணமென்றால், அங்கு அழைத்துச்செல்ல முடியுமா? விண்காவலர்களுக்கு தகவல் அனுப்பிவிடலாம்." ஒன்றும் பாதகமில்லை என மனம் கணக்கிட்டது. அவளின் கலம் இதிபோல் பல விண்கலங்களை இணைத்துச் செல்லும் சக்திவாய்ந்தது. மேலும் அந்தக்கலத்திலிருப்பவர்களைச் சந்திக்கவே தேவையில்லை; ஆதலால் பயமில்லை. "சரி. விண் இணைப்பு செய்ய ஆயுத்தமாகவும்" பதில் அனுப்பினாள். "நன்றி ! நல்ல வேளையாய் வந்தீர்கள்" என பதில் வந்த சில நொடிகளில் விண் இணைப்பிற்கான வேகத்திற்குக் குறைந்து, கோணம் மாறி, லேசர் கீற்றுகளின் துணையோடு இணைப்பு சாத்தியமாகியது.
நிலவிற்கான சரியான நேர்பாதையில் இரு விண்கலங்களும் இணைந்து பறக்கத்துவங்கிய சில வினாடிகளில் மீண்டும் தானியங்கி பொத்தானை இயக்கிவிட்டு ஒய்வெடுக்கலாமென்றால், திரையில் அந்த விண்கலத்திலிருந்து வீடியோ அழைப்பு வந்தது. மெல்லிதான கோபத்துடன் புருவங்கள் குவிய சிந்தித்தாள். இதுவரை இரு கலத்தில் இருப்பவர்களுக்கும் மற்றவர் யாரென்றோ, கலத்தில் ஏத்தனைப் பேரென்றோ தெரியாது. தமிழ் மொழி தெரிந்தவர்கள் என்று மட்டுமே தெரியும். சரி, அவர்கள் யாரென்று முதலில் அறிவோம் என நினைத்தவாறு தொடு-திரையில் விரல் பதிக்கவும், வீடியோ திரையில் மங்கலாய் ஒரு உள்ளங்கை திரை முழுக்க மறைத்திருந்தது தெரிந்தது. "பச்.." மெல்லிய ஏமாற்றமும் கோபமும் ஒருசேர கண்களை மூடி யோசித்தாள். விண்காவலருக்கு தகவல் அனுப்பிவிடவேண்டியதுதான்.

கண்களைத்திறந்தவளுக்கு திரையைப் பார்த்ததும் வியப்பு. திரையை விட்டு கைகள் அகல, ஒரு அழகிய குழந்தையின் முகம் தெரிந்தது. சிரித்தபடியே முகம் பின்னோக்கிச் செல்ல அந்தக்குழந்தையை ஒரு இளம்பெண் கைகளில் வைத்திருப்பது தெரிந்தது. தூரத்தில் ஓர் ஆண், கட்டுப்பாட்டு இருக்கையில் சாய்வாய் அமர்ந்திருந்தான்.
தன் முகத்தைக் காட்டும் தூரத்தில் அமர்ந்து விடியோவை உயிர்ப்பித்தாள். அவளைப் பார்த்தவுடன் அவர்கள் சிரித்தபடியே கையசைத்தார்கள். "ஆவ்.. உங்களிடம் எப்படி இந்தக் குழந்தை?" முதலில் கேட்டாள். "இவள் எங்களின் புதல்வி, அவ்வை" அந்தப்பெண் இயல்பாய் முதலில் பேசினாள். குழந்தை கைகளிரண்டும் நீட்டிச் சிரித்தது. சிறிது நேரப்பேச்சிலேயே அவர்கள் இடையே சினேகம் வளர்ந்தது. அரசாங்கத்திற்குத் தெரியாமல் பெற்றெடுத்து வளர்க்கும் மழலையாம். வாழ்வது சூரிய கிரகங்களைத் தாண்டிய புதியதோர் சிறிய கிரகமாம். இன்னும் தனித்து வாழ்வதற்கு ஏற்ற சூழல் செய்யப்படாமல் இருப்பதினால் சூரிய குடும்பத்து கிரகங்களையே உணவிற்கும், அத்தியாவசியப் பொருட்களுக்கும் நம்பியுள்ளதாகவும் சொன்னார்கள். இவர்களைப்போல் சில ஆயிரம் பேர் அங்கு இருக்கிறார்களாம். அவளின் வியப்பு அகலவே இல்லை.
"பொறுங்கள். சந்திக்க வருகிறேன்". தமிழர் பண்பாடு மறவாமல், பல்வேறு பழங்கள் கொண்ட ஒரு பெரிய குளிர்பதனப் பெட்டியைத் தள்ளிக்கொண்டே இணைப்புக்கதவைத் தாண்டி நடந்தாள். சந்தித்தார்கள். பெயர்கள் தெரிந்துகொண்டார்கள். அவ்வையின் பெற்றோர்கள் - இளவேந்தன், தமிழ்ச்செல்வி. மங்கையிடம் தாவினாள் அவ்வை. மகிழ்வாய் இருந்தது அவளுக்கு. அவர்கள் நிறையப் பேசினார்கள். "சரி. நான் அரசாங்கத்திடம் உங்களைப் பற்றி சொல்ல மாட்டேன் என எப்படித் தெரியும்?" வினவினாள். "உங்களை நம்பலாம் என பிரேம் தான் சொன்னான்" என்ற இளவேந்தன், "ஆம். பிரேம் எங்களின் நண்பன். எங்களுக்கு பல உதவிகள் செய்பவன். எங்களின் விண்கலம் இயந்திரக் கேளாறு பற்றி கேள்விப்பட்டதும் நீங்கள் வருவதைப்பற்றி தகவல் அனுப்பினான்..."
பகுதி-5 : மீண்டும் சந்திப்போம்
"ஓ, அப்படியா?" முகம் மலர்ந்தாள், "என்னைப்போல் இல்லாமல் அவ்வைக்கு பெற்றோர் நீங்கள் இருப்பது மகிழ்ச்சி". திரையில் வான்வழி நிலையத்ததிற்கு சிறிது நேரத்தில் சென்றடைவோம் என்ற செய்தி வந்தது. "நாங்கள் வர இயலாது. பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும். பிரேம் வருவதாக ஏற்பாடு." தமிழ்ச்செல்வி கூறினாள். "நானும்தான் சந்திக்க வேண்டும். நானும் உங்களுடன் இருக்கிறேன்." அவள் சொல்லிய படியே தகவல்கள் சென்றன. சில மணித்துளிகளில் பிரேம் வந்துவிட்டான், உயரமாய், ஒரு விண்வெளி-கால்பந்து விளையாட்டு வீரன் போல் தோற்றமளித்தான். ஒரு புதிய விண்கலத்தை அவ்வையின் பெற்றோருக்காக எடுத்து வந்திருந்தான்.
மங்கை ஓடிச்சென்று அவர்களுக்காக பல்வேறு பயிர்களின் விதைகள் அடங்கிய பெட்டி ஒன்றை எடுத்து வந்து பரிசளித்தாள். "மீண்டும் சந்திப்போம்" அவ்வையை அவள் முத்தமிட்டு வழியனுப்பினாள். அவர்கள் விடை பெற்றதும், தன் தாயைப் பற்றி கேட்டாள். "இதோ, சந்திக்க ஏற்பாடு செய்துள்ளேன். இங்கே 'மூன்-வாக்' வான் நிலையத்திற்கே வந்துவிடுவார்கள். நான் பழுதடைந்த இந்த வாகனத்தை சரிபார்க்க கொண்டு செல்ல வேண்டும். உன் கைத்தொலைதொடர்பு கருவியில் உன் தாயின் தகவல் வரும்" என்றான். "அது சரி.. என்ன பிரேம், வாகனம் பழுதடைய வைத்தது நீதானே?" கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். "ஆம் மங்கை, உண்மையில் பழுதடையவே இல்லை. பழுதடைந்தது போல் பாவனை மட்டும் காட்டும் வித்தையை நான் தான் செய்தேன்." சிரித்தான். "அடப்பாவி... இளவேந்தனின் முகத்தில் நிலவிய அமைதியினைப் பார்த்தபொழுதே சந்தேகம் வந்தது. உன் சிரித்த முகத்தைக் கண்டவுடன் புரிந்தே விட்டது. என்ன விளையாட்டு இது? எதற்கு இதெல்லாம்?"
"உன் உதவி எங்களுக்கு தேவைப்பட்டது மங்கை. நோக்கத்தைப் புரிந்துகொண்டால் உதவி செய்வாய் எனத் தெரியும். அதனால் தான் இவர்களைச் உன்னைச் சந்திக்க வைத்ததேன். நீ இந்த புதிய அமைப்பில் சேர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் என்பதே என் விருப்பம்".

"புரிந்துகொண்டேன் பிரேம். நான் என் தாயை என்னோடு யுரோப்பாவிற்கு கூட்டிச் செல்கிறேன். அந்தப் புதிய கிரகத்திற்கும் நாம் பிறகு செல்லலாம். சரி, இப்பொழுது என்ன செய்ய வேண்டும் சொல்" கேட்டாள் மங்கை. "அடுத்த வாரம் ஒரு நபரைச் சந்திக்க இதுபோலவே ஏற்பாடு செய்கிறேன். அவரையும் நம் இயக்கத்தில் சேர்க்க வேண்டும். முடியுமா??".
"முதலில் என் தாயைப் பார்க்க வேண்டும். பிறகு சொல்கிறேனே.." விடையளித்தாள்.வான் நிலையத்தில் தாயைப் பார்த்தவுடன் துள்ளிக் குதித்தாள். மங்கையைப் போலவே இருந்தாள் அவளின் தாய். நிலவில் விண்வெளிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தில் வேலையாம். பெயர் கேட்டுத் தெரிந்து கொண்டாள். நூறு முறை "அம்மா" எனக் கூப்பிட்டு சிரித்தாள். இருவரும் தாங்கள் வளர்ந்த கதையை சொல்லியும் கேட்டும் - சிரித்தபடியும் அழுதபடியும் அன்றையப் பொழுதை ஓட்டினார்கள். இனி அவர்களுக்குப் பொற்காலம் தான்.
இவையெல்லாம் நடந்ததிற்கு அடுத்த விடுமுறை நாளில் யுரோப்பாவிற்க்கும் நிலவுக்கும் இடையே எங்கோ வான்வெளியில் பயணம் சென்றுகொண்டிருந்த்தான் யுவன், வானவியல் தொழில்நுட்பத்தில் வல்லுனன். தனியே ஆராய்ச்சிகள் செய்து அவைகளை யு.எஸ்.ஐ. க்கு இலவசமாகத் தருபவன். திடீரென்று அபயகுரல் தகவல் ஒலித்தது. "என் பெயர் மங்கை. நாங்கள் வந்த விண்கலம் பழுதாகிவிட்டது. நிலவுக்குச் செல்ல வேண்டும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?"

தூரத்தில் நட்சத்திரம் ஒன்று கண் சிமிட்டியது !-- முற்றும் --

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

Thursday, September 14, 2006

நாங்கெல்லாம் அந்தக் காலத்தில..!!

நாங்கெல்லாம் அந்தக் காலத்தில முதல்ல ஈமெயில் செஞ்ச கதைய நெனச்சா இப்பவும் சிரிப்பு வருது... 98-ட்டுல கல்லூரி படிச்சிட்டிருந்த காலம். அப்ப எல்லாம் வீட்டில இணைய வசதி வைத்திருக்க வாய்ப்பே இல்லை. கல்லூரியில் தான் கணினிப் பக்கமே போக முடியும். அதுவும் ஒரு பழைய டாஸ் வகையா இருக்கும். 'சி' புரோகராம் தவிர வேற ஒண்ணும் அதில செய்ய முடியாது. அதனால புதுசா இந்த ஈமெயில்-ன்னா என்ன-ன்னு பார்க்கணும்-டா ஆரம்பிச்சான் நண்பன் ஒருத்தன். சரி, சனிக்கிழமை பாரதியார் யுனிவர்சிட்டி போயிரலாம்-னு முடிவானது.


அங்க தான் கல்லூரி அடையாள அட்டையை காண்பிச்சா பத்து ரூபாய்க்கு ஒரு மணி நேரம் 'பிரெவுஸ்' பண்ணலாம். பணத்தைக் 'கியு'வுல நின்னு கட்டி போய் உக்கார்ந்தா, கருப்பு வெள்ளை மாணிட்டரில வரி வரியா வருது இணையபக்கம் எல்லாம். ஆமை வேகம். ஒரு வழியா 'யாஹூ' ஈமெயில் போனோம். "டேய், நான் முதல்ல என் பேர எழுதிடடுமா?" - நம்ம நண்பன் கேக்குரான். அங்க பார்த்தா 'டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்' வரி வரியா ஒரு நாலு பக்கத்திற்க்கு மேல வந்துகிட்டே இருக்கு. "ஏண்டா, இதுல எதாச்சும் தப்பு பண்ணிட்டா நம்மள எதாச்சும் பண்ணிருவானுங்களா?" பயந்துட்டான் நம்ம நண்பன். ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து முக்கியமான 'டெர்ம்ஸ் அண்டு கண்டிசன்ஸ்'ஸ வேகமா எழுதி வெச்சுகிட்டான் பாருங்க.. அவன் முகத்தில ஒரே பெருமிதம். பின்னால ரொம்ப நாள் சொல்லி சிரிப்பா சிரிச்சு வெச்சோம்.

என்னதான் இன்னைக்கு கணிணி துறையைலேயே வேலைக்குச் சேர்ந்து பிளாக் எல்லாம் எழுதற அளவுக்கு நாம வளர்ந்திட்டாலும், இதை ஒரு தன்னடக்கம் தேவைப்படும்போதெல்லாம் நெனச்சுப் பாத்துக்குவேன். (டேய்.. வேணாம்டா. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல? - மனசாட்சி)

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

யார்ரா இவன் ?

எல்லாருக்கும் வணக்கம்.

இதனால் பொதுமக்களுக்கு தெரிவிச்சுக்க விரும்புவது என்னன்னா, வேணாம் மக்களே, இந்தப் முதல் பதிவு வெறும் சுயபுராணம். நீங்களா தலைப்பைப் பார்த்து யாரோ யாரையோ மறுபதிவு போட்டு தாக்கிட்டிருக்காங்க-ன்னு நினைச்சுகிட்டு படிக்கலாமுன்னு வந்தா ஏமாற்றம்தான்.

இதுக்கும் மேல படிக்கறீங்களா.. வாங்க..

நாம பொறந்து வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூர் தான். ரொம்ப நாளா நம்மளை கோவை, ஈரோடு, சேலத்தைத் தாண்டி வெளி உலகைக் காண்பிக்கவே இல்லை. அதனால ரொம்ப நாளா உலகம் தெரியாத வாலிபனா வாழ்ந்துக்கிட்டிருந்தேன்.

ஸ்கோலு படிக்கும்போதே தமிழார்வம் தலைக்கு வந்து நகைச்சுவை நாடகம் போட்டதுதான் நம்மளுக்குள்ள இருக்கிற திறமைய முதல்ல இந்த உலகுக்கு (??) அறிவிச்சது. அப்புறம், கல்லூரியில நாம படிச்ச காலகட்டத்தில நாம தான் பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கல்லூரி இதழில் கவிதை எழுதுவது-ன்னு கலக்கிப்புட்டோமில்ல..

இப்பத்தான், மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பியல், வணிகவியல், கணிணியியல், விளம்பரம், விற்பனை, வியாபாரம், இப்படி எல்லாத்தையும் படிச்சிட்டு (நான் எங்கே, எப்படி இருக்கவேண்டியவன்? ) இப்பொ போயி ஒரு பெரிய்ய கணிணிப் பாட்டிக்கு (இப்ப வந்திருக்க கணிணிக்கெல்லாம் பாட்டி... மெயின் பாட்டி !!) உக்கார்ந்து பேன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

இப்ப இங்க வந்து எழுதச்சொல்லி நண்பன் வற்புறுத்திக் கூப்பிடவும், ("சீக்கிரம் வாடா, நான் உனக்கும், நீ எனக்கும் மாறி மாறி பின்னூட்டம் போட்டுக்கலாம்..")

இதோ வந்தாச்சு...!

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்