Saturday, September 30, 2006

போட்டிக்குன்னு நாமளும் கதை எழுதிய கதை..!


செப் '06 தேன்கூடு போட்டிக்கு அனுப்பிய என் கதை "நிலவுக்குப் போகணும். கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" நான்காம் இடத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டபோது பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ஏனென்றால் புதிதாக வலைப்பதிவுகளுக்கு வந்தவன் நான். வலையில் நம் கதை வெளிவந்து பலரின் நட்பும், விமர்சனங்களும், பாராட்டுக்களும் கிடைத்த பொழுது இன்னும் எழுத ஊக்கம் பிறந்திருக்கிறது.

இதில் சின்னச் சின்ன சுவராஸ்யங்கள் இருக்கின்றன. அதுதான் இந்தப்பதிவின் தலைப்பாக கொடுத்துள்ள நாம போட்டிக்கதை எழுதிய கதை..!

பதிவு தொடங்காவிட்டாலும் தமிழ்மணமும், தேன்கூடும் பல நாட்களாகப் படித்து வந்தவன் நான். சீக்கிரம் தொடங்க நண்பர்களின் வற்புறுத்தல் வேறு. நமது ஆர்வமும் அதிகரித்தது. ஆனால் இந்தக் கதைகளுக்கெல்லாம் சுறுசுறுப்பாக விமர்சனங்கள் எழுதினாரே 'சோம்பேறி பையன்'; அவர் பெயரைக் அவரிடமிருந்து கைப்பற்ற காப்பிரைட் வழக்கு தொடரும் அளவிற்கு நாம உலக மகா சோம்பேறி.

பின்னே என்னங்க..? "உறவுகள்" தலைப்புக்கே நாம யோசிச்சு வச்சிருந்த கதைதானே இது. என்னது..? எனக் கேட்பவர்கள் இப்பவும் போய் கதையைப் பாருங்க, தெரியும். யோசிச்சுகிட்டே இருக்கையில நாட்கள் வேகமா ஓடிடுச்சு. அலுவல்பளு தாங்காம வார இறுதிகளிலும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததில பதிவு தொடங்கக் கூட முடியல. பரிசுகள் எல்லாம் அறிவிச்சு, கள்ளவோட்டு, பரிதாப ஓட்டு போட்டுட்டாங்க என்ற சோகங்களும், கோபங்களும் பதிவுகளா வந்துபோய் எல்லாமே முடிஞ்சுபோச்சு.

நாம மட்டும் நம்ம கதைய மனசுலெ வச்சுகிட்டு உக்காந்து வழக்கம் போலவே யோசிச்சிட்டு இருக்கோம். அப்பதான் "லிப்ட்" கேட்கற இந்தத் தலைப்பு. ஆகா!

"என்ன கதைடா எளுதப்போறே?"ன்னு கேட்ட ஒருத்தன்கிட்டே - "டேய் மச்சி, எல்லாரும் பைக்குல லிப்ட் கேட்பான்; கார்ல லிப்ட் கேட்பான்; ஏன் லாரில கூட லிப்ட் கேட்பான்; நாம கொஞ்சம் வித்தியாசமா ஸ்பேஸ் ஷிப்-லேயே ஒரு லிப்ட் கேக்கிறோம் பாரு; அந்த இடத்தில தான் கதை, திரைக்கதை, டைரெக்ஷன்-ன்னு நம்ம பேர் போடறோம்". நம்ம கதையை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளார எழுந்து ஓடியே போயிட்டான் அவன்.

சரி, இந்த முறை எப்படியும் பதிவு தொடங்கி கதையை அனுப்பிடனும்-னு முடிவு செஞ்சாச்சு. நள்ளிரவில வேலை விட்டு வந்தாலும் பேப்பரில் கதைக்காக குறிப்புகள் எழுதத் தொடங்கியாச்சு. கூகிள் தேடல் நிறைய செஞ்சு கிரகங்கள், அவை ஒரு சுற்றுபாதை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் (85/24 ~= 3 1/2) எல்லாம் யோசித்து யோசித்து எழுதியாச்சு. போட்டோக்களும் எடுத்து வைத்தாச்சு.

அடித்து திருத்தி மாற்றியெழுதி, அப்பப்பா..

உறவுகளுக்கான அர்த்தமே தொலைந்து போகும் அபாயம் இருக்கும் வருங்காலத்தில் எப்படி ஒரு வலுவானதாய் உள்ள தாய்-சேய் உறவு தானாகவே புதுப்பித்துக்கொள்கிறது என்பதாக நாம உருவாக்கியிருந்த கதையில், உறவுகளைக் கதையைக் கொஞ்சம் குறைத்து "கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?" - தலைப்பை சரியாகச் சேர்க்க நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்.

பீட்டா செய்த மாயம், நம்ம பதிவு தமிழ்மணத்தில சேர்க்கவே ரொம்ப நாளாயிடிச்சு (தேன்கூட்டில் முதலிலேயே ஓகே). கதையை வித்தியாசமா படங்களா வெளியிட்டாச்சு. (பின்னால், தேன்கூட்டில் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க எழுத்து வடிவிலும் சேர்க்கப்பட்டு வந்தது கதை).

எல்லாம் முடிஞ்சும் கதை படிக்க யாருமே வரலை. சரி, நாம ஒரு நடை எல்லா கதைகளுக்கும் போயிட்டு வந்திடுவோம்-னு பொடி நடையா கிளம்பியாச்சு. எல்லா படைப்புகளையும் படிச்சவன், ஒரு வழியா (ஒரு வரியா) விமர்சணமெல்லாம் எழுதி, பலரையும் ஈர்த்தது; எல்லா பதிவுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டிய போதே நம்ம போட்டிப் பதிப்பிற்கும் வெளிச்சம் போட்டு பலரை படிக்க வைத்ததெல்லாம் ஒரூ யுக்திதான். இதில் நமக்கு பல வியப்புகள். பல நட்புக்கள். பல பாடங்கள்.

"சரி, ஒருவேளை கொஞ்சம் பதிவுகளை தொடங்க லேட்டாகி கதையை போட்டிக்கு அனுப்பும் முன்னாடியே அக்டோபர் '06 வந்திருந்தால் என்ன செஞ்சிருப்பே?"-ன்னு கேட்டா, இதே கதைக் கருவில் கொஞ்சம் மாற்றி விண்வெளியுகத்தில் அரசாங்கதின் தனிமனித உறவுகளின் மேலான ஆதிக்கத்தை எதிர்த்துக் வெடித்துக் கிளம்பும் ஒரு புதிய விடுதலைப் போராட்டமாக வெளியிட்டிருப்பேன் :-) னு தான் சொல்லணும்.

சரி சரி, இவை எல்லாம் இருக்கட்டும். இந்த முறையும் தேர்வு முறையில் நடந்த குறைபாடுகளை பலர் அழுத்தமாக எடுத்துச் சொல்லியதில் மேலும் சில கட்டுப்பாடுகள் செய்துள்ளார்கள் தேன்கூடு நிர்வாகத்தினர். வரவேற்கத்தக்க விஷயம் இது - நல்லதொரு போட்டிக்கான வழிவகைகளை இவை பலப்படுத்தும்.

ஆசாத் அவர்கள் "விடுதலை"-ன்னு அருமையான தலைப்பும் கொடுத்தாச்சு. 18-ம் தேதியே கடைசித்தேதியாம். நம்ம கதைகேட்டு உக்கார்ந்திருந்த எல்லாரும் ஓடுங்க, போய் ஒரு நல்ல கதையோடு களத்தில குதியுங்க. நாமளும் இந்த முறையும் வித்தியாசமா சிந்திக்கணும்.

என் கதையைப் படித்து மகிழ்ந்த, படித்து ஓட்டுப்போட்ட, படித்துவிட்டு பிடிக்காததால் ஓட்டளிக்காத பலருக்கும் அதைப்போலவே கதையை விமர்சித்த, பின்னூட்டமிட்ட, பாராட்டிய, தனிமடல் எழுதிய அனைவருக்கும், போட்டியில் கலந்துகொண்டதும் தனிமடல் இட்டு ஆலோசனைகள் அளித்த தேன்கூடு போட்டிக் குழுவிற்கும், என் விமர்சணங்களையும் பலரின் பார்வைக்கு வைத்ததிற்கும் என் நன்றிகள் பல.

-வலைப்பூவில் "முரட்டுக்காளை"யாக நம்ம ராஜ்

8 comments:

முரட்டுக்காளை said...

சொல்ல மறந்த கதை விஷயங்கள் சில...
அ. யுரோப்பாவில் தண்ணீர், பிராணவாயுவான ஆக்சிஜென் எல்லாம் இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.

ஆ. மனித இனம் இப்பொழுது முதல்-நிலை பரிணாம வளர்ச்சியில் இருக்கிறோமாம். இரண்டாம் நிலை என்பது ஒரு சூரிய மண்டலத்தில் பல கிரகங்களில் வசிப்பது. மூன்றாம்-நிலை என்பது ஒரு பால்வெளி (Milkyway) - நட்சத்திரக் கூட்டதில் பரவிவிடுவது. இது நடந்தபின் எந்த ஒரு ( பெரிய சூரியன் வெடித்துச் சிதறுவது போன்ற ) மோசமான ஆண்டவெளி மாற்றத்தினாலும் மனித இனத்தை அழிக்கவே முடியாதாம்.

இ. ஈமெயிலுக்கு பண மதிப்பீடு செய்து குப்பை-மெயில்களை ஒதுக்க யோசனை சொன்னது வேறு யாருமல்ல - பில் கேட்ஸ் தான். (The Road ahead)

நிலா said...

நடை, கரு, பின்னல் என உங்கள் கதை நன்றாக வந்திருந்தது. கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். மங்கைக்கு அவ்வளவு பெரிய அறிமுகம் தேவையில்லை என்பது என் எண்ணம்.

அறிவியல் கதை எழுத க்ரியேடிவிடி அதிகம் தேவை. கலக்குகிறீர்கள். தொடருங்கள்

வெட்டிப்பயல் said...

உங்க வெற்றி கதைக்கு பின்னால இவ்வளவு பெரிய கதையா???

பிளாக்கர் பிரச்சனைல இருந்து ஒருவழியா உங்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது ;)

முரட்டுக்காளை said...

//கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருக்கலாம். மங்கைக்கு அவ்வளவு பெரிய அறிமுகம் தேவையில்லை என்பது என் எண்ணம்.//

சரியா சொன்னிங்க நிலா. எனக்கு நீளத்தை குறைக்க எண்ணியும் செயலில் வரவேயில்லை. இனி கதைக்கு தேவை இல்லேன்னா தயவு பார்க்காம வெட்டிவிட்டுடனும்-னு முடிவு செஞ்சாச்சு.

//அறிவியல் கதை எழுத க்ரியேடிவிடி அதிகம் தேவை. கலக்குகிறீர்கள். தொடருங்கள் //

:-) வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி நிலா !

//உங்க வெற்றி கதைக்கு பின்னால இவ்வளவு பெரிய கதையா??? //

எல்லோருக்கும் ஒரு கதை இருக்கும் தானே வெட்டிப்பயல்? வருகைக்கு மிக்க நன்றி !

அது சரி, கொஞ்சம் பெரிய பதிவாதான் போட்டுட்டேன். அதுக்காக "இவ்வளவு பெரிய கதையா???"-னெல்லாம் கேட்டு.. அவ்வ்வ்வ்வ்... :-D

ராசுக்குட்டி said...

முரட்டுக்காளை... இந்தக் கதையில் உங்களின் உழைப்பு தெரிகிறது, அதை விடுதலை தலைப்புக்கு ஏற்றார்ப்போல் மாற்றும் பகுதி நச். ஒரே கதையில் கூட்ட வேண்டியதை கூட்டி குறைக்க வேண்டியதை குறைத்தால் பல்வேறு கதைகளை உருவாக்கலாம் என்பது வியக்க வைக்கிறது.

"விடுதலை" தலைப்புக்கு என்ன கதை வரும் என்று இப்போதே ஆவலாய் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.

நண்பர்கள் பக்கம் said...

நண்பரே,

தங்களுடைய படைப்பு அருமை.

மேலும், உங்கள் படைப்புக்களை, நீங்களே, தமிழ்வாக்கு.காமில் பதிவு செய்து, உங்கள் படைப்புகளுக்கு மற்றவர்கள் வாக்களிக்க வாய்பை தாருங்கள்.

மிக்க நன்றி
குத்தூஸ்

WWW.TamilVakku.com
தமிழ்வாக்கு.காம்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in